articles

நெருப்பும் வெயிலும் ஒன்று! - சின்னமணல்மேடு த. இராமலிங்கம்

நெருப்பும் வெயிலும் ஒன்று! - சின்னமணல்மேடு த. இராமலிங்கம்

கோடைக் காலம் கொடுமை - அது
கொட்டும் வெயிலோ கடுமை!
ஓடி ஆட வேண்டாம்! - வெயில்
ஓய்ந்த பிறகே ஆடு!

காலை மாலை குளித்து-உடம்பைக்
காத்துக் கொள்ள வேண்டும் !
மாலை நேரம் பார்த்து - ஆடி
மகிழ்ச்சி கொள்ள வேண்டும்!

வெயிலுக்கேற்ற உணவு- நாமும்
விரும்பி உண்ண வேண்டும்!
வெயிலில் அலைந்தால் தம்பி- ஆங்கே
வெப்புநோயும் தோன்றும்!

நல்ல உணவு நுங்கு - அது
நாளும் கிடைக்கும் இங்கு!
உள்ளம் விரும்பி வாங்கு! - அதை
உண்டால் இல்லை தீங்கு!

இளநீர் தண்ணீர் அமுதம்! -அதனை
ஏற்பின் வெப்பம் விலகும்!
நலநீர் அதுவே தம்பி! - அது
நல்கும் நன்மை பலவும்!

வெள்ளரிக் காய் எண்ணு-அதை
விரும்பி வாங்கி உண்ணு!
இல்லம் எங்கும் மோரு ! - அதில்
இருக்கு நன்மை நூறு!

நெருப்பும் வெயிலும் ஒன்று! -அதை
நீங்கல் ஒன்றே நன்று!
பொறுப்பில் லாமல் வெயிலில்-நீ
போக வேண்டாம் தம்பி!